Friday, June 3, 2011

ஈழம் அழிய வைகோ செய்த தவறுகள்

ஆம். இந்த தலைப்பு வைப்பதால், இக்கட்டுரையோ அல்லது தமிழ் லீடர் இணையத்தளத்தாலோ பரபரப்பு ஏற்பட வேண்டும் என்பதல்ல நோக்கம். இது விவாதமாக வைக்கப்படும் கட்டுரை. இக்கட்டுரையின் முடிவில் உங்களுக்கு தலைப்பின் மீது தாக்கம் ஏற்படுவது நிச்சயம் என்பதே அந்த விவாதம்.


 
வைகோ.

யார் இவர்?

1944ம் ஆண்டு நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மே மாதம் 22ம் தேதி பிறந்தவர் வை.கோபால்சாமி.

பள்ளிப்படிப்பில் எட்டு வயது முதல் கல்லூரி படிப்பு வரை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டவர்களில் இவரே முதல் பரிசுக்குச் சொந்தக்காரர்.

பேச்சுப் போட்டி மட்டுமா, வாலிபால் விளையாட்டு வீரர்.

தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்.

உலக வரலாறுகளை மடை திறந்த ஆறாய் ஓடும்.

1965ம் ஆண்டு, சென்னை போலீஸார் நடத்திய கட்டுரைப்போட்டியில், மாநிலக் கல்லூரி மாணவரான கோபால்சாமிக்கே முதல் பரிசு.

1969ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சிறந்த பேச்சாளர் விருது வாங்கியவர்.

தி.மு.க.வில் மாணவர் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர்.

மேடையில் ஏறினால், எந்த குறிப்புகளையும் பார்க்காமல் மணிக்கணக்கில், கேட்பர்களின் மனம் ஈர்க்கும் வகையில் பேசக்கூடிய பேச்சாளர்.

1971-77 வரை குருவிக்குளம் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்.

1977ல் மிசா கைதி.

1977-79 நெல்லை-குமரி மாவட்ட தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்.

மூன்று முறை மாநிலங்களவை எம்.பி.

இரண்டு முறை மக்களவை எம்.பி.

30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

தி.மு.க.வின் போர்வாள் என்று கலைஞரின்  வர்ணனைக்குள்ளானவர்.

தி.மு.க.வின் மேடை பேச்சாளர்களில், 1980 முதல் தி.மு.க.வில் அதிகம் ஈர்க்கப்பட்டவர் வை.கோபால்சாமி.

தி.மு.க..வில் வைகோவின் வளர்ச்சி என்பது செயற்கையானது அல்ல. அவரது வளர்ச்சி என்பது திட்டமிடாத ஓர் வளர்ச்சி. கலைஞரின் அன்புக்கு பாத்திரமானத்தால், அக்கட்சியில் அவருக்கு எல்லாம் சாத்தியமாகியது.

1989ம் ஆண்டு வரை வைகோவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். ஆனால், யாருக்கும் தெரியாமல், ஏன் கலைஞருக்கே தெரியாமல் தமிழ் ஈழத்துக்கு ரகசியமாக பாஸ்போர்ட் இல்லாமல், கள்ளத்தோணி மூலம் சென்றார். 23 நாட்கள் அவர் அங்கே தங்கி இருந்தார். அவர் சென்ற பிறகே, கலைஞருக்கு தகவல் கிடைக்கச் செய்தார். அதுதான் கலைஞருக்கு வைகோ மீது ஏற்பட்ட முதல் கசப்பு. வைகோ ஈழத்திலிருந்து வெளியே வரும் வரை கலைஞரும், வைகோ பயணத்தை வெளியிடாமல் இருந்தார்.

ஈழத்திலிருந்து வந்ததும், கலைஞர் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு கலைஞருக்கும் வைகோவுக்கும் சில மனக்கசப்புகள் வளர்ந்துக் கொண்டே இருந்தன. அந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் காட்டு தர்பார் போல ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடியது. அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க.வில் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு பொதுக்கூட்டங்கள் நடந்தன. பல மேடைகளில் வைகோவின் குரல் ஒலித்தது.

தி.மு.க.வில் வைகோவின் இமேஜ் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் வைகோவை தி.மு.க.வின் போர்வாள் என்று வர்ணிக்கத் தொடங்கினார் கலைஞர். நிலைமை இப்படி இருக்க, கலைஞரின் மனசாட்சி(?) என்று தி.மு.க.வினர் பின்னாளில் புளங்காகிதம் அடைந்த முரசொலி மாறன், வைகோவை ஓரம்கட்டும்படி மாமாவிடம் புகார் வாசிக்கிறார்.

காரணம், டெல்லியில் முரசொலி மாறனைவிட வைகோவுக்கு அதிக செல்வாக்கு இருப்பது. இந்த காரணத்தை மாமா ஏற்றுக் கொள்வாரோ இல்லையோ என்று நினைத்து, இரண்டாவதாக, கட்சியில் ஸ்டாலினை வாரிசாக கொண்டு வரும் வேளையில் வைகோவுக்கு அபரிதமான வளர்ச்சியும் செல்வாக்கும் இருப்பது நல்லதில்லை என்று சொல்கிறார் மாறன்.

குடும்பத்திற்காக அன்று முதல் பலி கொடுக்கப்பட்டவர் தான் வைகோ. திட்டமிட்டு, அவரை கட்சி ஒதுக்குகிறது. அவரை யாரும் மேடைகளில் பேச அழைக்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவுகள். இது கட்சியினருக்கு அரசல் புரசலாக தெரிய, கட்சியின் ஒரு சாரார் வைகோவை ஆதரிக்க முற்படுகின்றனர்.

இந்த ஆதரவுக் கூட்டத்தில் முக்கியமானவர் நாஞ்சில் மனோகரன். அவர் கலைஞர் கருணாநிதியை தாக்கி, ‘கருவின் குற்றம்’ என்று  எழுதிய கவிதை, தினகரன் நாளிதழில் வெளியானது. இதற்கு மறுப்புக் கவிதை எழுதி, அதே நாளிதழில் வெளியிடச் செய்தார் கருணாநிதி. அதை எழுதிய கவிஞர், அன்றைய செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் மதுராந்தகம் ஆறுமுகம்.

கருணாநிதிக்காக, மறுப்புக் கவிதை எழுதும் அளவுக்கு மதுராந்தகம் ஆறுமுகத்துக்கு ஆற்றல் இருந்திருந்தால், அவர் எப்படி வைகோவின் ம.தி.மு.க.வுக்கு வந்தார் என்பதுதான் கேள்வி.

கடைசியில், எல்லாம் வைகோவின் தூண்டுதல் காரணமாக இந்த கலகங்கள் நடப்பதாக கலைஞர் அறிவித்தார். அவரை நீக்க வேண்டும் என்று குரல்களும் எழுந்தன. இந்த நிலையில், எல்லா பிரச்னைக்கும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கருணாநிதியிடம் விழுந்தார் வைகோ.

என்னடா இது. வெளியே போ என்றால், போகாமல் இங்கேயே இருக்கிறானே என்று நினைத்த கருணாநிதி. தனக்கு எதிராக கணக்கு கேட்ட எம்.ஜி.ஆரையே, ஒரு கணக்காக அனுப்பி வைத்தவர்தானே கருணாநிதி.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்று எம்.ஜி.ஆரை அனுப்பி வைத்தார்.

வைகோ போர்வாள் ஆயிற்றே! அவரை எப்படி வெளியே அனுப்பலாம் என்று சிந்தித்த போதுதான், அவருக்கு மத்திய உளவுத்துறையிலிருந்து மர்மமான கடிதம் வந்தது. அது மத்திய உளவுத்துறை அனுப்பிய கடிதம்தானா என்று இன்றளவும் சந்தேகம் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மூலம் என்னை வைகோ கொலை செய்ய திட்டமிட்டதாக டெல்லியிலிருந்து உளவுத்துறை தனக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஓர் அறிக்கை வெளியிட்டார் கலைஞர்.

இது கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சதி? என்றார் வைகோ.

வைகோ உடனே வெளியேறினாரா? இல்லை, ‘நாங்கள்தான் உண்மையான தி.மு.க. எங்களுக்குத்தான் அறிவாலயம் சொந்தம்’ என்று முழக்கமிட்டார். காரணம், அவருக்கு தி.மு.க.வில் இருந்து கிடைத்த உச்சப்பட்ட ஆதரவு. 30 மாவட்டச் செயலாளர்களில் கிட்டத்தட்ட 12 பேர் பகிரங்க ஆதரவு கொடுத்தார்கள். அன்றைய பொருளாளர் சாதிக்பாட்சா, வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் மறைமுகமாக வைகோவை ஆதரித்தார்கள்.

அதுமட்டுமா, வைகோ என்ற நபருக்கு ஒரு நாளிதழே களத்தில் இறங்கியது. அது அன்றைய கே.பி.கந்தசாமி நடத்திய ‘தினகரன்’ நாளிதழ்தான். தி.மு.க.வை கைப்பற்ற முயற்சித்தார். கடைசியில், அம்முயற்சி பலனளிக்காமல் போனதால், ம.தி.மு.க. உருவானது.

அதுவும் நள்ளிரவில் சுடுகாட்டில். காரணம், வைகோ நீக்கியதை கண்டித்து பத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்களில் ஒருவரது சவ ஊர்வலம் முடிந்த பின்னர், அதே சுடுகாட்டில் சூளூரைத்தார் வைகோ.

அங்கே மலர்ந்ததுதான் மறுமலர்ச்சி தி.மு.க. 1994ம் ஆண்டு தோன்றிய ம.தி.மு.க.வில் இந்த நாள் வரை மறுமலர்ச்சி ஏற்பட்டதா என்றால்?... வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் அனைவருமே அதற்கு பதில் சொல்வதைவிட மெளனம்தான் சாதிக்க முடியும்.

கட்சியில் தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள் மட்டுமில்லை. பல கட்சிகளில் இருந்து இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக ஓட்டமெடுத்தார்கள் வைகோவை நோக்கி. இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத இடத்தில், வைகோ மட்டுமே இருப்பார். எதிர்கால முதல்வர் இவர்தான். கலைஞருக்கு பிறகு தி.மு.க.வே அவரிடம்தான் போய்விடும்… இப்படி எத்தனையோ பேச்சுக்கள். அத்தனையும் இன்றளவிலும் பேச்சு பேச்சாகவே இருக்கிறது என்பதுதான் வேதனை.

ம.தி.மு.க. தொடங்கியதும் முதல் கூட்டம் சென்னை ராயபுரத்தில், தி.மு.க.வை தோற்றுவித்து அண்ணா பேசிய இடம். ராயபுரம் சுழல்மெத்தை.

முதல் கோஷம் “பொதுவாழ்வில் தூய்மை... அரசியலில் நேர்மை… லட்சியத்தில் உறுதி”.
இந்தக் கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கி, மறுநாள் விடிய விடிய நடந்து, அதிகாலை 4.45 மணிக்கு முடிந்தது.

அன்று மேடை ஏறிய வைகோவின் எழுச்சி மிக்க குரலை கேட்டதைவிட, அவரது அழுகுரல்தான் அதிகம் பேசப்பட்டது. அவரது கண்களில் வழிந்த நீர், மேடையில் வீற்றிருந்தவர்களின் விழிகளில் ஓடிய நீர், கூட்டத்தை கேட்க வந்தவர்கள் வடித்த நீர் என, ம.தி.மு.க. ஓர் கண்ணீர் மேடையாகவே ஆகியது.

கட்சித் தொடங்கி, இரண்டு வருடங்கள் எந்த மேடையாக இருந்தாலு, வைகோ அதை கண்ணீரால் நனைத்துவிடுவார். கட்சித்தலைவன் ஒரு நாள் அழலாம். ஏதாவது முக்கியமான கட்டத்தில் கண் ஓரம் ஈரம் அரும்பும். இதுதான் தலைவன்களிடம் மக்கள் பார்த்தது. ஆனால், அழுது அழுது பேசி, இன்னமும் வைகோ அழுதுக் கொண்டுதான் இருக்கிறார்.

அவர் பேசும் போது ஏதாவது விசேஷம் இருக்கும்!

அவர் கோபம் காட்டினால், அதில் ஓர் அர்த்தம் இருக்கும்!

அவர் அழுததால், கண்ணீர் ஓடியதை தவிர ஒரு பலனையும் அவரும் காணவில்லை. கட்சிக்காரனும் பலன் அடையவில்லை!

கட்சி ஆரம்பித்து, ஒரு வருடத்திற்குள் நடைப்பயணம் தொடங்கினார். அதுவும் யாரை எதிர்த்து தெரியுமா?

அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து. ஜெயலலிதா தலைமையிலான அராஜக ஆட்சியை தூக்கியெறிவேன் என்று கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

சென்னையில் அது மிகப்பெரிய ஊர்வலமாக வந்து, கடற்கரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்திக் காண்பித்தார். உண்மையிலேயே அது கின்னஸ் சாதனையாகவும் இருக்கலாம்.

கிட்டத்தட்ட 13 மணி நேரத்துக்கும் மேலாக கட்டுப்படான ஊர்வலம் சென்னையில் நடந்தது.

தி.மு.க. ஆடிப்போனது. வைகோவுக்கு இத்தனை கூட்டமா? என்று வாய்ப்பிளந்தது பத்திரிகைகள்.

1996ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டு, ம.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

1998ம் ஆண்டு யாரை கடுமையாக எதிர்த்தாரோ, அந்த அம்மையார் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்களவைத் தேர்தலை சந்தித்தார்.

1999ம் ஆண்டு, மக்களவைக்கு மீண்டும் தேர்தல் வந்தது. இம்முறை யார் இவரை கழுத்தை பிடித்து பிடரியில் அடித்து அனுப்பினார்களோ அதே தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். கேட்டால், தான் ஏற்கனவே பா.ஜ.வுடன் கூட்டணி வைத்திருந்தேன். அக்கூட்டணியில் தி.மு.க.தான் வந்து சேர்ந்துவிட்டது என்பார் வைகோ.

அக்கூட்டணியில் இருந்த வைகோ, தி.மு.க.வுக்கும் சேர்த்துதான் பிரசாரம் செய்தார். எப்படி அவரால் முடிந்தது?

தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றியதால், பத்துக்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள். அந்த தீக்குளிப்புக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று வைகோவிடம் கேட்டால், என்ன பதில் என்பதல்ல முக்கியம்.

அரசியல். அதுவும் தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால், சுயமரியாதைக்கெல்லாம் அர்த்தம் தெரிந்திருந்தாலும் தெரியாமல் இருத்தல் நலம். அப்போது வைகோவுக்கு எது நலம் என்பது தெரிந்திருந்தது.

அங்கே சுயமரியாதை சிந்தனைக்கு இடம் அளித்தாரா வைகோ. அதைவிட சுயமரியாதையோடு(!) தி.மு.க.வை பாராட்டிப் பேசினார் வைகோ. தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று மேடைக்கு மேடை ,முழங்கினார் வைகோ.

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து பா.ஜ. கூட்டணி அரசிலும் ம.தி.மு.க. பங்கேற்றது. அடுத்து, 2001ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. இங்கே இருந்துதான், அரசியலில் அவர் தவறான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார் என்பதை வாசகர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டும். அதாவது தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த ம.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டில் முறித்துக் கொண்டு வெளியேறியது. அதுவும் தனித்துப்போட்டி. ஒரு இடம் கூட வெற்றிப் பெற முடியவில்லை.

சரி. இருக்கவே இருக்கிறது. விடுதலைப் புலிகளை வைத்து மீண்டும் அரசியல் செய்யத்தொடங்கினார். புலிகளை ஆதரித்துப் பேசியதால், வைகோவை வேலூர் சிறையில் அடைத்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இது நடந்தது 2002ம் ஆண்டு.

புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ, தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்தப் போது, அவரை தமிழக அரசு, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

சென்னை விமான நிலையத்தில் அவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிய போது, “பாசிச ஜெயலலிதா அரசை மக்கள் சக்தியைக் கொண்டு தூக்கியெறியும் வரையில் ஓயமாட்டான் இந்த வைகோ” என்ற குரல் ம.தி.மு.க.காரனின் காதில் மட்டுமின்றி, அனைத்து பத்திரிகையாளன் காதிலும் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, சிறையில் இருப்பேனே தவிர, ஜாமீன் கேட்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தார்.

ஒரு நாளா..

இரண்டு நாளா…

ஒரு மாதமா…

இரண்டு மாதமா…

19 மாதங்கள், அதாவது 577 நாட்கள் சிறையில்  இருந்தபடியே கட்சியை நடத்திய பெருமை உலக அரசியல் வரலாற்றில் வேறு எந்தத் தலைவனுக்கு கிடையாது.

திராவிட கட்சிகளில் தலைவர்களாக இருந்தவரில், அதிக நாள் சிறை தண்டனை பெற்றவர் என்ற பெருமை வைகோவைத் தவிர வேற யாருக்கும் கிடையாது. கிடைக்காது.

வேலூர் சிறையில் இருந்த அவரை, மீட்க கையெழுத்து இயக்கம் நடந்தது. அதில் முதல் கையெழுத்துப் போட்டவர் மாஜி தலைவர் கலைஞர் கருணாநிதி.

வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்ததும், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாக சுற்றித் திரிந்தார்.

40க்கு 40 அடிதத்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி. ஆனாலும், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சிக்கு ரொம்பவே ஆடியது காங்கிரஸ். கூட்டணி கட்சிகள் கேட்ட துறைகள் எல்லாம் கிடைத்தன.

வைகோ என்ன செய்தார்?

மத்திய அமைச்சரவையில் பதவியேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

ஏன்? எதற்கு என்ற விளக்கம் அளிக்கவேயில்லை.

நான்கு எம்.பி.க்கள் பெற்றிருந்தும், ம.தி.மு.க.வுக்கு பல அழைப்புகள் வந்தும் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்றார் வைகோ.

அமைச்சரவையில் பங்கேற்க, வெளியிலிருந்து ஆதரவு…

நாங்கள் கூட்டணியில் பங்கேற்கப் போவதில்லை என்று கூச்சல் கேட்ட நேரத்தில்…

வைகோ இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாரே?

அரசியலில் இப்படி ஒரு பண்பாளரா…

இத்தனை துணிச்சல் ஒரு அரசியல் தலைவருக்கு வருமா? என்று தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவே தன்னை பாராட்ட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அதில் இருந்தது.
ஆனால், கட்சி?

இவரை நம்பி நாயாய் பேயாய் செருப்பு கூட இல்லாமல் கட்சிக்கு உழைத்தவன் கதியை எண்ணிப்பார்த்தாரா?

அதற்காக, அமைச்சரவையில் சேர்ந்து ஊழல் செய்ய வேண்டி சொல்லவில்லை. மத்தியில் ஒரு அமைச்சர் இருந்தால், தன்னால் கட்சி வளருமே! கட்சிக்காரனுக்கு நாலு காண்ட்ராக்ட் கிடைக்குமே?

சரி. போகட்டும். வைகோவையே இந்த வையகமே பாராட்டடும். நாமும் பாராட்டுவோம்.

தி.மு.க.வில் இருந்துக் கொண்டே இருந்தார். கலைஞரை மேடை தோறும் பாராட்டினார்.

என்ன நடந்தது 2006ம் ஆண்டு.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு!

வைகோவை சிறையிலிருந்து மீட்டு வந்த தி.மு.க.வில் அவர் இருந்தாரா? அங்கிருந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்.

தி.மு.க.வில் அவருக்கு 21 தொகுதிகள் தர, இவர் 23 கேட்க, அங்கே இருந்தால்தானே தருவதற்கு?

வெளியேறினார். அ.தி.மு.க.வில் 35 தொதிகளை வாங்கிக்கொண்டு, சிறையில் போட்ட ஜெயலலிதாவை சிரித்துக் கொண்டே கும்பிட்டார்.

“என்னை கட்சியில் வைத்துக் கொண்டே, ம.தி.மு.க.வை அழிக்க முற்பட்டார் கருணாநிதி” என்று குற்றஞ்சாட்டினார்.

ஆனால் கட்சியினரும் நெருங்கிய பத்திரிகையாளர்களும் வைகோவிடம் கடுமையாக விவாதம் செய்தனர்.

அவர்களுக்கு வைகோ தந்த பதில்: ”ஸ்டாலினுக்கு என்னை கார் கதவை திறக்கச் சொல்கிறீர்களா” என்றார பத்திரிகையாளர்களிடம்.

“கட்சியை எப்படியாவது அழித்துவிட்டு, என்னையும் நிர்கதியாக்கப் பார்க்கிறார்” என்றார் கட்சியினரிடம்.

சரி? தேர்தலில் ம.தி.மு.க. ஜெயித்தது ஆறு தொகுதிகள்.

அ.தி.மு.க. கூட்டணியில் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம்தேதி வரை அமைதியாகவே இருந்தார்.

இங்கேதான் தலைப்புக்காக நாம் சிலவற்றை சொல்ல வேண்டியிருக்கிறது. 2009ம் ஆண்டு ஈழத்தில் இறுதிக்கட்ட போரை ராஜபக்‌ஷே நடத்திக் கொண்டிருந்தார். அந்த போருக்கு உறுதுணையாக இருந்தார் சோனியா காந்தி. அதாவது அந்த போருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது மத்திய அரசு.

மத்திய அரசை ஈழத்தமிழர்களுக்காக, எதிர்க்க வேண்டிய கருணாநிதி, பாதுகாத்தார். பாதுகாத்தார் என்று சொல்வதைவிட, மத்திய அரசை எதிர்த்துப் பேசியவர்களையும் சிறையில் தள்ளும் அளவுக்கு கருணாநிதி துணிந்துவிட்டார்.

கருணாநிதிக்கு எப்படி இப்படி துணிச்சல். அதுவும் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் கொடுமையை எதிர்த்து போராடுவதற்கு கூட அனுமதி கொடுக்க முடியாத அளவுக்கு கருணாநிதிக்கு என்ன மன அழுத்தம்.

காங்கிரஸின் காலில் விழுந்து கருணாநிதி, “நீங்கள் கவலையேபடாதீர்கள். தமிழர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சோனியாவுக்கு கருணாநிதி தைரியம் சொல்லும் அளவுக்கு கருணாநிதி மாறியது ஏன்?

ஒரே ஒரு காரணம்.

தி.மு.க. மைனாரிட்டி அரசாக தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டிருப்பதுதான்.

ஒருவேளை, தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்தால், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி இருப்பார். இல்லையென்றால், கூட்டணியில் இருந்து கொண்டே மிரட்டிக்கூட இருப்பார்.

இதெல்லாம் நடக்குமா? என்று நீங்கள் கேட்கலாம்.


ஆம். அதற்கு தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்திருக்க வேண்டும். அதற்கு தி.மு.க. கூட்டணியில் 2006ம் ஆண்டு ம.தி.மு.க.வும் இருந்திருக்க வேண்டும். அப்படி ம.தி.மு.க. அக்கூட்டணியில் நீடித்திருந்தால், தி.மு.க. நிச்சயம் அத்தேர்தலில் 118 தொதிகளில் வென்றிருக்கும். ம.தி.மு.க.வும் 21 தொகுதிகளில் குறைந்தது 15 தொகுதிகளில் வென்றிருக்கும்.

தி.மு.க. மெஜாரிட்டியாக ஆட்சியில் அமர்ந்திருக்குமானால், அதே கூட்டணியில் ம.தி.மு.க. இருந்திருந்தால், காங்கிரஸை நெருக்கடி கொடுத்திருக்க முடியுமா… முடியாதா?

ஈழத்தமிழர்களுக்கு இத்தனை நெருக்கடி சூழ்ந்திருந்த வேளையில் கூட்டணியில் இருந்து கொண்டே, கருணாநிதிக்கு வைகோ நெருக்கடி கொடுத்திருக்க முடியும். அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், வைகோயின் தொடர் நெருக்கடிக்கு வளைந்து கொடுத்திருக்க மாட்டாரா கருணாநிதி?

அப்படியும் ஈழத் தமிழர்களுக்காக, இலங்கையில் அப்பாவி மக்கள் மீது நடத்தும் போரை நிறுத்தச் சொல்லி நிச்சயம் கருணாநிதி முழக்கமிட்டிருப்பார். அவருடன் வைகோ இருந்திருந்தால். வைகோ மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணிக்கு ஈழத்தமிழர்களுக்காக திருமாவளவனும் நெருக்கடி கொடுத்திருப்பார். இவர்கள் இருவரும் நெருக்கடி கொடுக்கும் போது, எந்தக் கூட்டணியில் அவர் இருந்திருந்தாலும் டாக்டர் ராமதாஸூம் கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்திருப்பார்கள்.

அல்லது வைகோ, ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரை தன்வசமாக்கிக் கொள்ள கருணாநிதியே, அவர்களுக்கு ஏதாவது வரலாற்றில் பெயர் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி, களத்தில் குதித்திருக்கலாம்.

இச்சூழ்நிலையில், இலங்கைக்கு தானாகவே நெருக்கடி ஏற்பட்டிருக்குமா இல்லையா என்று சொல்லுங்கள்.

வைகோ நெருக்கடி கொடுத்தும், மெஜாரிட்டி இருந்தும் கருணாநிதி செவிமடுக்காமல் போயிருந்தால்… என்று சிலர் சொல்வது எப்படி அனுமானமாக இருக்குமோ அதைத்தான், வைகோ தி.மு.க. கூட்டணியில் நீடித்திருந்தால்…

இலங்கையில் இறுதிப் போர் நடந்திருக்காது.

பிரபாகரன் செத்திருக்கமாட்டான்.

மூன்று லட்சம் மக்கள் செத்திருக்கமாட்டார்கள் என்று தமிழ் லீடர் இணைய தளமும் அடித்து சொல்கிறது.

வைகோவால், ஈழத் தமிழர்களின் நலன் அழிக்கப்பட்டிருக்கிறது என்ற வாதத்திற்கு, எதிர் வாதம் இருந்தால் தமிழ் லீடருக்கு அனுப்பி வையுங்கள். நிச்சயம் பதிவு செய்யப்படும்.


முடிவரைக்கு முன்பாக,

வைகோவின் தாரக மந்திரங்கள்

பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, லட்சியத்தில் உறுதி.

இதுவரை வைகோவின் செயல்பாடுகளை பார்த்தால் அரசியலில் நேர்மையும் இல்லை. லட்சியத்தில் உறுதியும் இல்லை. பொதுவாழ்வில் தூய்மை அவரிடத்தில் உண்டு என்றாலும், நாட்டில் 60 முதல் 70 சதவிகித மக்களிடம் தூய்மை இருக்கிறது. அந்த மக்கள் தொகையில் அவரும் ஒருவராக இருப்பதில் தவறில்லை.

ஆனால், கட்சித் தலைவர் என்னும் போது...

அதுவும், அரசியல்... தேர்தலை சந்திக்கும் அரசியல் என்றால் அக்கட்சித்தலைவர் எடுக்கும் முடிவுகள் குறைந்தப்பட்சம் கட்சியை காப்பாற்ற வேண்டமா?

அரசியல் என்றால் போராட்டங்கள், தழும்புகள், தோல்விகள், வருத்தங்கள், வேதனைகள், அழுகை, தனிமை இவற்றுடன் சில மகிழ்ச்சியும் இருத்தல் அவசியமாகிறது.

அந்த மகிழ்ச்சி வைகோவுக்கு கிடைத்திருக்கிறதா? அவரே அவரது நெஞ்சில் கை வைத்து சொல்லட்டம்!

ஒரு மனிதன் வாழ்க்கையில் போராடலாம். ஆனால், போரட்டமே வாழ்க்கை என்றால், அது சாதனையா வேதனையா?

அர்சியலில் எப்போதுமே, தவறான முடிவு எடுப்பவர் வைகோ, சொந்தக் கட்சிக்கே சூனியம் வைத்துக் கொண்டவர் வைகோ என்று அக்கட்சியினரால் பேசுவது அவரது காதுக்கும் கேட்டிருக்கும்.

நல்ல பேச்சாளர்...

நல்ல பண்பாளர்...

நல்ல மனிதர்....

ஆனால், நாட்டில் நல்ல தலைவராக அவரால் வரமுடியவில்லையே!



முடிவுரை:

ஒருவேளை, 2006ம் ஆண்டிலிருந்து தி.மு.க. கூட்டணியில் வைகோ நீடித்திருந்து, ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசும் ஆளும் தி.மு.. அரசும் எதையும் செய்யவில்லை என்று 2009ம் ஆண்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி இருந்தால், அவரது பின்னால் வேறு கட்சிகளும் அணிவகுத்திருக்கும். ஏன், .தி.மு.. அணியில் பா... விடுதலைச் சிறுத்தை, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்திருக்கும். அந்த வைகோவை இன்று யாருமே வீழ்த்தி இருக்க முடியாது. 




சில விளக்கங்கள்:
இந்தப் பதிவை கண்ட வாசகர்கள் கடுமையான கண்டனத்தையும், அதே வேளையில் மிகுந்த பாராட்டுக்களையும் பதிவு செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள், திட்டுக்கள் இரண்டையுமே தமிழ் லீடர் சமமாகவே எடுத்துக் கொள்ளும். 
இது ஒரு விவாதம். வைகோ மீது பணம் வாங்கினார் என்று குற்றச்சாட்டு எழுப்பவில்லை. அரசியலில் மோசடி செய்தார் என்று எழுதவில்லை. அவர் எடுத்த முடிவின் காரணமாக இதெல்லாம் நடந்திருக்கிறது என்பதைத்தான் இந்தப் பதிவு சொல்கிறது.
அவர் ஈழ விடுதலையில் காட்டிய உறுதி என்றுமே மறுக்க முடியாது. மறைக்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் மீது காட்டும் அதே பாசமும் நேசமும், ஈழத்தமிழர்கள் மீதும், இந்திய மக்கள் மீதும் அவர் வைத்திருக்கிறார் என்பதும் மறுப்பதிற்கில்லை.
காரணம், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக அங்கேயும் இங்கேயும் ஓடியாடிக் கொண்டிருந்த நேரம். அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. நீடிக்குமா நீடிக்காதா என்ற விவாதம், அதாவது தனது கட்சிக்கு இத்தேர்தலில் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் எழுந்த நிலையில், ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு, அணு உலை வெடித்துவிட்டது.
அந்த நேரத்தில் வைகோவிடம் இருந்து ஓர் அறிக்கை.
கல்பாக்கத்தில் இருக்கும் அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஓர் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
எந்தச் சூழ்நிலையிலும் அவர் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நேசித்தார் என்ற போது மெய் சிலிர்க்கிறது.
அதே வேளையில், ஐந்தாண்டு காலமாக ‘குடும்ப ஆதிக்கமா…. இல்லை தமிழ்நாட்டின் ஜனநாயகமா… நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்’ என்று முழக்கமிட்ட வைகோ ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பதுதான் ம.தி.மு.க.வினரின் மனதில் எழுந்த வேதனை.
2006 தி.மு.க. கூட்டணியில் அவர் நீடித்திருந்தால் என்ற அடிப்படையில் தான் இந்த கருத்து ஓர் விவாதமாக, கட்டுரையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காரணம், உலகத்தில் எது நடந்தாலும் குறிப்பாக தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடந்துவிட்டால், அது தன்னால்தான் நடந்தது என்று அறிவித்து மகிழ்ந்துக் கொள்ளும் அளவுக்கு மனம்(!) படைத்தவர்தான் கருணாநிதி.
அப்படிப்பட்டவருடன் கூட்டணியில் இருந்து கொண்டு, ஈழத்தமிழர்களின் போரை நிறுத்த வேண்டும் என்று வைகோ தனியாக புறப்பட்டிருந்தால், அவருக்கும் பேரும் புகழும் கிடைத்துவிடும் என்று அஞ்சி, கருணாநிதியும் வைகோவின் இழுத்த இடத்துக்கு வந்து, காங்கிரஸை எதிர்த்து இருப்பார் என்பதுதான் இக்கட்டுரையின் மையக் கருத்து.