Saturday, December 25, 2010

புலிகளை உயிர்ப்பிக்க வைக்கும் முனைப்புக்களின் பின்னணியில்…

2009 ஆண்டு மே 18 – 19களில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்ட தாக அல்லது வேரோடு பிடுங்கி எறியப்பட்டதாக அல்லது துடைத்தெறியப் பட்டதாக இலங்கை அரசாங்கம் வெற்றி விழாக்களை கொண்டாடியது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மூத்த தளபதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக பெரும் பட்டியலையே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் படங்களுடன் பட்டியலிட்டன.

ஆரம்பத்தில் 17 ஆயிரம் புலிகள் சரணடைந்தார்கள் எனத் தொடங்கி இப்போ 9 ஆயிரம் புலிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் எனவும் கூறிவருகிறது. சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட புலிகளின் மூத்த தளபதிகள், போராளிகள் பலருக்கு என்ன நடந்தது என்பது பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதான ஆதாரங்கள் இந்திய அரசிடம் வழங்கப்பட்டதாக இலங்கை தெரிவித்து வந்தது. நீண்ட இழுபறியின் பின் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் இருந்து இருவரது பெயர்களும் நீக்கப்பட்டன. இவர்கள் இருவரும் மரணம் அடைந்ததாக கூறி இந்திய தடா நீதிமன்ற நீதிபதி தட்சணாமூர்த்தி இருவரது பெயர்களையும் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை இந்திய சீ.பீ.ஐயின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொண்டதாக 2010 ஒக்டேபர் 25 – 26ஆம் திகதிகளில் இந்தியாவில் வெளிவந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கில் இருந்தும் ஏற்கனவே இவர்களது பெயர்களை இலங்கை நீதிமன்றம் நீக்கியிருந்தது.

இப்படி இருக்க விடுதலைப் புலிகளையும் அந்த அமைப்பின் முக்கியஸ்தர்களையும் இப்போ மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்கு இந்திய இலங்கை புலனாய்வு மட்டங்கள் செய்திகளை அவிழ்த்து விட ஆரம்பித்துள்ளன.

அண்மையில் இந்திய புலனாய்வு தரப்புகள் அந்த நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொல்ல திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தன.

இப்போ இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் புதிய செய்தி ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறது.
அண்மையில் கைதான தாவூத் இப்ராஹிம் குழுவினருக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் புதிய தகவல்கள் வெளி வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

அதில் இறுதி யுத்தத்தில் புலிகள் தரப்பில் இருந்து தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையான ஆயுதங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றதாகவும் தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க் இடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து இந்தத் தகவல்கள் வெளிவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாமல் யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
மிர்சா பெக்கிடமிருந்து பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை இந்தியப் புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்பாக அவர் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், பாதுகாப்புக் கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளதாகவும் மும்பைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்ந்து செல்கின்றது.

இதே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் பின்னோக்கிச் சென்றால் விடுதலைப் புலிகளை முற்றாக நிர்மூலமாக்கியதாக வெளியிட்ட வீரகாவியங்கள், செய்திகள், தகவல்கள் என்பவற்றை பார்வையிட முடியும்.

எனினும் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் முன்பு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட வீரகாவியங்களை விமர்சித்து வந்த நம்மவர்கள் இப்போ இந்த தகவல்களைப் பார்த்து புழகாங்கிதம் அடைந்து நம்பகரமான தகவல்கள் எனக் கூறுவதும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மானும் தப்பிச் சென்றவர்களில் இருக்கலாம் எனக் கூறி பரபரப்படைவதும் கிளுகிளுப்படைவதும் துர்ப்பாக்கியமே. அதுவும் இலங்கை அரசாங்கத்தினதும் அதன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு ஜாம்பவான்களின் உள்நோக்கம் தெரியாது யாவற்றையும் வியாபாரமாக்குவது வேதனையே.

உண்மையில் இலங்கை இந்திய மட்டங்களில் விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க வைக்கும் முனைப்புக்களின் பின்னணியில் – உள்ளக, பிராந்திய, சர்வதேச அரசியல் இலக்குகள் என்ன என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம் ஆகும்.

இலங்கை அரசினால் விடுதலைப்புலிகளுக்கெதிராக தொடுக்கப்ட்ட இறுதி யுத்தத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் குற்றச்சாட்டுக்கள் வலுப் பெற்று வருகின்றன. இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் போராளிகள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கடும் சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் உள்ளிட்ட படையினரிடம் அகப்பட்ட நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் வதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் காணொளிகளாகவும் ஒளிப்படங்களாகவும் இலங்கைப் படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் பிரித்தானியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் உயர் மட்டங்களில் இருந்து மீண்டும் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் இலங்கைப் படைகளின் யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்வதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை இலங்கை எல்லைக்குள் நுழைய விடுவதில்லை என்ற அரசாங்கத்தின் அழுங்குப்பிடி இப்போ தகர்ந்து இப்போ உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவைச் சந்திக்க முடியும் என்ற சமிக்ஞை காட்டப்பட்டு உள்ளது. இது இலங்கை அரசாங்கம் ராஜதந்திர மட்டத்தில் அடைந்த மிகப் பெரிய தோல்வி என பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய உள்ளட்ட கட்சிகளும் அரசாங்கத்தின் நெருக்கமானவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

தவிரவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய விஜயத்தின் போது அவருக்கு ஏற்பட்ட அதி உச்ச நெருக்கடிகள், அவமதிப்புகள், நாட்டின் தலைவர் ஒருவர் எதிர்கொள்ளக் கூடாத கரிபூசல்கள் என்பன உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு வரும் பாரிய அழுத்தங்களின் எதிரொலிகள் இந்தியாவிலும் கேட்கத் தொடங்கியுள்ளன. பெங்களுர் சென்ற இலங்கை அமைச்சர்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து நாடு திரும்ப வேண்டியேற்றபட்டது.
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை ஜனாதிபதியை திருப்பி அனுப்ப முடியுமானால் தமிழகத்தின் 6 கோடி தமிழர்களால் ஏன் எதனையுமே செய்ய முடியாதுள்ளது என்ற கேள்விகள் தமிழகத்தை துளைக்க ஆரம்பித்து விட்டன. இவை பெருமெடுப்பில் இந்திய அரசியலில் தாக்கத்தை உண்டு பண்ணாவிட்டாலும் ஆங்காங்கே அதிர்வுகளை சலசலப்பை உண்டுபண்ணிய வண்ணம் இருக்கும் என்பதனை இந்திய ஆளும் தரப்பினரும் புலனாய்வு மட்டங்களும் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றன.

இவை ஒருபுறம் இருக்க உள்நாட்டில் புலிப் பூச்சாண்டி, யுத்தப் பேய் என அரசியலை ஓட்டிக் கொண்டிருந்த மகிந்த அரசாங்கம் இப்போ ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றது. அதன் ஒரு வெளிப்பாடே ஜனாதிபதியின் மூத்த சகோதரரது 20.12.10 திங்கட்கிழமை ஆற்றிய உரை.

‘மக்களின் வயிறு உணர்வு என்ற வகையில் எதனையும் செய்ய தவறினால், துறைமுகங்கள், விமான நிலையங்கள், வீதிகள் நிர்மாணிப்பதில் எந்த பயனுமில்லை. முன்னர், அம்பாந்தோட்டை வருவதற்கு அச்சமாக இருக்கும். தற்போது மிகவும் அழகாக இருக்கிறது. துறைமுகத்தை பார்க்க முடியும். விமான நிலையத்தை பார்க்க முடியும். ஜனவரி மாதம் வந்ததுடன் கிரிக்கட் போட்டியை காணலாம்.
எது எப்படியிருந்த போதிலும் தேங்காய், சீனி, வெங்காயம், அது இதுவொன அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. நான் கடைக்கு செல்வதில்லை. எனினும் நேற்றிரவு வீடுகளுக்கு சென்று, அந்த மக்களிடம் விசாரித்தேன்.
‘ஐயோ சபாநாயகர் அவர்களே! வெங்காயம் வாங்க சென்றேன் 125 ரூபா, 150 ரூபா எனக் கூறுகின்றனர். சீனி வாங்க சென்ற போது 100 ரூபா என கூறினர். இதில் சிரமங்கள் இருக்கின்றன’ என மக்கள் கூறியதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன் மூலம் முதலாவது ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்ற போது மகிந்த வீழ்ந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற மூத்த சகோதரரே மறைமுகமாக தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையின் பேலியத்தை, தங்காலை பிரதேச சபைகளிலும், தெற்கின் முக்கிய மாவட்டமான காலியின் அம்பலாங்கொட பிரதேச சபையிலும், கொழும்பின் மகரகம பிரதேச சபையிலும் வரவு செலவுத் திட்ட அறிக்கை தோல்விகண்டன.
கண்டி மாவட்டம் வலப்பனை பிரதேச சபையில் வரவுசெலவு திட்ட விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. இவையாவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுள் உள்ளவை. இந்தத் தோல்விகள் அரசாங்கத்தின் உள்ளே பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளன.

இன்னொரு புறம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் தள்ளி அவரது அனைத்து பதக்கங்களையும் பறிமுதல் செய்து அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளும் மகிந்த கோத்தபாய சகோதரர்களின் நடவடிக் தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவது. யுத்த மகா வீரனாகப் போற்றப்பட்டு இலங்கை வரலாற்றில் முதலாவது ஜெனரலாக தாமே பதவி உயர்த்திய சரத்பொன்சேகா தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றது. இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டதா என்பதில் ஏற்கனவே முரண்பட்ட நீதியரசர்கள் சிலர் தனிப்பட்ட காரணங்களால் வழக்கில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

முன்னர் ஒருமுறை இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு காட்டுச் சட்டத்திற்கு நிகரானது எனக் கூறி உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இந்த சர்ச்சையினால் நீதிமன்ற அமர்வுகள் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றன. இதனால் இப்போ ஐக்கியதேசியக் கட்சியின் ஊடாக சரத் பொன்சேகாவுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்று அவரை விடுவிக்கலாம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகின்றது.

ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவியேற்பின் பின் இவ்வாறான தொடர் தோல்விகளைச் சந்திக்கும் மகிந்த தனது கட்சியின் உள்முரண்பாடுகளாலும் குடும்ப முரண்பாடுகளாலும் சிக்கித் தவிக்கின்றார்.

மகிந்தவின் அரசியல் முகம் என வர்ணிக்கப்பட்ட இளைய சகோதரருக்கும் மகன் நாமல் ராஜபக்ஸவுக்குமான தனிப்பட்ட மற்றும் அரசியல் முரண்பாடு அதிகரித்துச் செல்கிறது. கடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்திற்கும், துறைமுகத் திறப்பு விழாவின் போது ஹம்பாந்தோட்டைக்கும் பசில் ராஜபக்ச சென்றிருக்கவில்லை. கேட்டால் அமரிக்கா சென்றதாகக் கூறினார்களாம். ஆனால் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றில் அனைவரும் சமூகமளித்திருக்க வேண்டும் என ஜனாதிபதி தனது கட்சிக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதுமட்டும் அன்றி பசில் ராஜபக்ஸவின் அமைச்சிலும் அவரது திணைக்களங்களிலும் நாமலின் நீலப்படையணியினர் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் நாமலின் உத்தரவுகளுக்கே கட்டுப்படுகின்றன. இதனால் பசில் கடும் கோபமுற்றிருக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர்கள் நிமால் சிறீபால டீ சில்வா, மைத்திரிபால சிறீசேன, ஜோன் செனிவிரட்ன, முன்னாள் பிரதமர் ரத்ணசிறீ விக்கிரமநாயக்கா, பௌசி ஆகியோருடன் இணைந்து இரகசிய பேச்சுவார்த்தையிலும் பசில் ஈடுபட்டுள்ளார் எனவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மகிந்தவிடம் இருந்து பறிக்க வேண்டும் என இவர்கள் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னொருபுறம் ஜனாதிபதிக்கும் நாமலுக்கும் நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் துமிந்தசில்வா, மற்றும் முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டாரவின் மகன் உதித்த பண்டார ஆகியோர் கோத்தபாய ராஜபக்ஸவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் அனைத்து திணைக்களங்களங்களையும் மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் விமல் வீரவன்சவின் அமைச்சு மற்றும் திணைக்களங்களும் விதிவிலக்கல்ல. இதனால் விமலும் சூடாகியுள்ளதாக தகவல்.

முன்னதாக சமல் ராஜபக்ஸவின் அமைச்சைப் பறித்து அவரைச் சபாநாயகராக நியமித்தமை மற்றும் சமலின் மகனிற்கு இருந்த முன்னுரிமைகளை பறித்தமை தொடர்பாக சமல் ராஜபக்ஸவும் அதிர்ப்தியுற்று இருந்ததாக தகவல். அதன் வெளிப்பாடே நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அண்மையில் வெளியிட்ட கருத்து எனவும் பேசப்படுகிறது.

இவை யாவற்றிற்கும் அப்பால் சிரேஸ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட பௌசி, சரத் அமுனுகம, திஸ்ஸவித்தாரண, டியூ குணசேகர உள்ளிட்ட பலரும் கடுமையான அதிர்ப்தியில் இருப்பதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் பௌசியின் பேத்தியினது குடும்பநிகழ்வில் திடீரென கலந்து கொண்ட மகிந்த அவரைச் சமாதானப் படுத்த முனைந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு திரும்பும் இடம் எல்லாம் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள மகிந்தவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் ஓரளவிற்கு முடிவுக்கு வந்தமை பேரிடியாக அமைந்துள்ளது. கட்சியின் யாப்பு நிறைவேற்றப்பட்டமை, தனது மாவட்டத்தையே பிரதிநிதித்துவம் செய்யும் தன்னை விட, நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை முன்னர் பெற்றுக் கொண்ட, மக்களின் செல்வாக்குள்ள சஜித் பிரேமதாஸாவின் எழுச்சி என்பன பெரும் தலையிடியாக உள்ளன. இதனால் தனது வாரிசை நாட்டின் தலைவராக்கும் கனவு தகர்ந்து விடுமோ என்ற அச்சம் அவரைப் பின் தொடர்கின்றது.

குறிப்பாக சஜித்தின் எழுட்சி அதனுடன் சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுணா ரணதுங்க, டிரான் அலஸ் ஆகியோர் ஐக்கியதேசியக் கட்சியில் இணைவதற்கான முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளமை உள்ளட்ட ஏகப்பட்ட காரணிகள் ஏக தலைவன் எனக் கர்சித்த மகிந்த ராஜபக்ஸவின் நிம்மதி தூக்கம் என அனைத்தையுமே தவிடுபொடியாக்கிவிட்டன.

இந்த நிலையில் தான், புலிகளை நிர்மூலமாக்கியதாக உலகளாவிய ரீதியில் தாமே முழக்கமிட்டுவிட்டு அந்த முழக்கத்தின் அதிர்வுகள் ஓயமுதலே புலிகளை உயிர்ப்பித்து அதுவும் மேற்குலகின் வைர எதிரிகளான இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுத இயக்கங்கள் பாதாள உலகக் குழுக்கள் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி மீண்டும் ஒரு அரசியல் பித்தலாட்டத்திற்கு இலங்கையின் புலனாய்வுத் தரப்பு பிராந்திய ரீதியான கூட்டு சதி முயற்சிகளை எடுத்துள்ளது.

இதன் மூலம் சர்வதேசரீதியாக எழுந்துவரும் தமக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளையும், தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகள் தொடர்பாக உருவாகிவரும் அரசியல் ரீதியான எழுச்சிகள் மற்றும் சர்வதேச ஆதரவு அலை என்பவற்றையும் உள்நாட்டில் கட்சிக்குள்ளும், குடும்பத்துள்ளும், மக்கள் மத்தியிலும் உருவாகிவரும் எதிர்ப்புகளையும் திசைதிருப்ப முனைகிறார்கள் மகிந்தர்களும் அவர்கள்தம் பரிவாரங்களும்.
இந்த வலைப் பின்னலுக்குள் நம்மவரும் அகப்படத்தான் போறோம் என அடம்பிடித்ததால் இனி யார்தான் காப்பாற்றப் போகிறார்கள்?
- ராஜா பரமேஸ்வரி: ஜி.ரி.என்

நன்றி: சுத்துமாத்துக்கள்

No comments:

Post a Comment